Monday, 6 December 2021

தனியே

நினைவிருக்கிறதா?
இருண்ட உலகின்
மூலையில் ஒளிந்திருக்க
கண்சிமிட்டி
வெளிச்ச உலகைக் கொடுத்து
உன்னோடு
நடைபோட வைத்தாயே

தொலைந்து போன
நாட்கள் எல்லாம்
மீட்டுக் கொடுத்தாயே
இன்னிசையாய் மீட்டிக் கொடுத்தாயே

துயில் கலைந்த காலையாய்
திருப்பத்தில் பிரிந்த சாலையாய்
சட்டென்று விட்டாயே
மீண்டும் அந்த
இருள் சூழ் உலகின் மூலையில்

நொறுங்கி விழுந்து
உடைந்துச் சிதறி
கதறி அழுது
கத்தி அழைத்து
பதிலில்லா உலகில்
பரிதவித்து நின்றேனே
பாதியாகி நின்றேனே

அடைத்து வைத்த அறையின்
சாளரத்தின் வழி வந்த தென்றல்
குயில் குரல் தேடி
மயில் அழகைத் தேடி
கானகத்துள் இழுத்துச் செல்ல

ஆர்ப்பரிக்கும் அருவி
கொட்டும் மழை
கொந்தளிக்கும் கடல்
நீளும் மலை
நிசப்த இரவு
எண்ணிலடங்கா விண்மீன்
எத்திசையும் இயற்கை
பரந்து கிடக்க

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
வளைந்து நெளிந்து
அமைதியாக
ஆற்று நதியாக
இயற்கையின் எச்சத்தையும்
எந்தன் மிச்சத்தையும் தேடி
தனியே ஓடிக்கொண்டிருக்கிறேன்

பயணங்களில் படித்திருக்கிறேன்
தொலைத்த ஒன்று
ஏதோ உருவில் வருமாம்

வரட்டும்
ஆனால்
அது ஏதோ ஓர் உருவாகவே இருக்கட்டும்

பயணங்கள்
பல மனிதரைக் கொடுத்தது
பாடம் கற்பித்தது
எல்லோருக்கும்
தனித்தனி நிறுத்தங்கள் தானே

உந்தன் நிறுத்தத்தில் சொல்லிக்கொண்டு இறங்கியிருக்காலாம்


எந்தன் நிறுத்தம் தேடி
பயணப்படுகிறேன்
பயணப்படுவேன்
தனியே


No comments:

Post a Comment

Shattered

Theriala.... Life la next chapter ah epti start pana nu.... Niraya pera hurt pandren... Satisfied ah ila... Inoru life la fulfilled ah Iruka...